பட்டப்பகலில் மாஜி ஆசிரியையிடம் 4.5 பவுன் செயின் பறிப்பு

ஈரோடு, மே 27:  ஈரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.ஈரோடு சிதம்பரம் காலனியை சேர்ந்த பெலிக்ஸ் மனைவி பிராஞ்கிளின் (71). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பிராஞ்கிளினை இரண்டு மர்மநபர்கள் பைக்கில் பின்தொடர்ந்தனர். சிதம்பரம் காலனி அருகே வந்தபோது, மர்மநபர்களில் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கி, பிராஞ்கிளின் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் செயினை பறித்து கொண்டு பைக்கில் ஏறி தப்பினார்.

பிராஞ்கிளின் இதனை உணர்ந்து கூச்சலிட்டார். ஆனால், அதற்குள் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசார் பிராஞ்கிளினிடம் விசாரணை நடத்தி, செயின் பறிப்பு நடந்த இடம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், செயின் பறித்த மர்மநபர்களுக்கு 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது புகைப்படங்களை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அதிக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: