முதல்வரின் விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, மே 27:  முதல்வரின் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் தலா 2 பேர், சிறந்த பயிற்றுநர்கள் 2 பேர், சிறந்த உடற்கல்வி இயக்குநர்-ஆசிரியர் 2 பேருக்கு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. விருதுடன், பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.10,000 மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும். இதை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இது தவிர, விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு விருதுடன் ரூ.10,000க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய 2 வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.   

இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.06.2022. விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in  வழியாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மீது ‘முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை  600 084’ எனும் முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஸ்குமாரை 7401703490, 0424  2223157 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: