குழித்துறையில் ஜூன் 30க்குள் குடிநீர் திட்ட பணிகள் நிறைவடையும்

மார்த்தாண்டம், மே 27:  குழித்துறை நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப்பணிகள் ஜுன் 30க்குள் நிறைவடையும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். குழித்துறை நகராட்சியில் அனைத்து பகுதி மக்களுக்கும் தேவைக்கு ஏற்ப, குடிநீர் வழங்குவதற்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.36 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் துவங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. இதற்காக நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் ஜேசிபி மூலம் தோண்டப்பட்டன. குடிநீர் குழாய்கள் குழித்துறை வி.எல்.சி. மைதானம் மற்றும் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் குவித்து வைக்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆரம்பத்தில் வேகமாக நடந்த பணிகள் பின்னர் ஆமை வேகத்துக்கு மாறியது.

பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பைப்புகள் பதிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை சாலை சீரமைக்கப்பட வில்லை. இதுபோல் பல இடங்களில் பழைய குடிநீர் குழாய்கள் உடைந்ததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் நடந்த பிறகு கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக கவுன்சிலர்கள் பல்வேறு புகார்கள் தெரிவித்தனர். குடிநீர் திட்ட பணியை உடனே முடிக்க வேண்டுமென்று கவுன்சில் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் குழித்துறை நகராட்சி அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ராமதிலகம், இன்ஜினியர் பேரின்பம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராஜேஷ்குமார், ராஜன், நகராட்சி துணைத் தலைவர் பிரவீன் ராஜா, கவுன்சிலர்கள் செல்வகுமாரி, ஜெயந்தி, ரோஸ்லெட், ரத்தினமணி,  பிஜு, ரவி,  ஷாபு,  ரீகன் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் ஜூன் 30ம் தேதிக்குள் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் நிறைவு செய்து  காங்க்ரீட் மற்றும் இன்டர்லாக் சாலைகள் சீர் அமைத்து தரப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Related Stories: