விபத்தில் இறந்த பங்க் ஊழியர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு தொகை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மக்கள் நீதிமன்றம் உத்தரவு

நெல்லை, மே 27: தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, வடுகப்பட்டி கிராமம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேனி. விவசாய கூலித் தொழிலாளி. இவரது கணவர் மாரிமுத்து ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி வேலை முடிந்து மாலையில் மாரிமுத்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிய போது ராஜபாளையம் தளவாய்புரம் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் பலத்த காயமடைந்து இறந்தார். அவர் வேலை பார்த்த பெட்ரோல் பங்கில் அவரது பெயரில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கணவர் இறந்தவுடன் இன்சுரன்ஸ் காப்பீட்டு தொகை கேட்டு கிருஷ்ண வேணி விண்ணப்பம் செய்தார். ஆனால் தனியார் நிறுவனம் காப்பீடு தொகை வழங்காமல் காலம் கடத்தியது.

இதுகுறித்து மாரிமுத்து மனைவி கிருஷ்ணவேனி நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்றுக் கொண்ட மக்கள் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக தனியார் நிறுவன மேலாளருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இருதரப்பினருக்கும் இடையே நடந்த சமரச பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டில், விபத்தில் உயிரிழந்த பெட்ரோல் பங்கு ஊழியர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையை வங்கி கணக்கு மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜபாளையம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் மனைவியின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் செலுத்தி வரவு வைக்கப்பட்டது.

Related Stories: