திருச்சி அருகே பழையபாளையம் ஜல்லிக்கட்டில் 32 பேர் காயம் 787 காளைகள் சீறிப்பாய்ந்தது

துவரங்குறிச்சி, மே27: திருச்சி அருகே பழையபாளையத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 32 பேர் காயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பழையபாளையத்தில்  வரதராஜபெருமாள் கோயில், பட்டத்தளச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் 787 காளைகளும், 300 காளையர்களும் களம் இறக்கப்பட்டன. போட்டியை தாசில்தார் லெட்சுமி துவக்கி வைத்தார். முதலில் ஊர் காளைகள் அவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்திருந்த 787 காளைகள் களமிறக்கப்பட்டு ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டது.

வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் களத்தில் நின்று விளையாடியது. சில காளைகள் காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பணம், வெள்ளிக்காசு, கட்டில், சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகளாக வழங்கப்பட்டன. இதில் 18 வீரர்கள், 7 மாடு உரிமையாளர்கள் மற்ரும் 10 பார்வையாளர்கள் என 35 பேர் காயமடைந்தனர். அதேபோல் 5 காளைகளும் காயமடைந்தது. பாதுகாப்பு பணிக்காக டிஎஸ்பி ராமநாதன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை பழையபாளையம், அழகாபுரி, சத்திரப்பட்டி மற்றும் தாதப்பட்டி கிராம ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: