பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் புதிய தொழில்முனைவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர், மே 27: திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் பெற்று தொழில் துவங்கிட தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டிற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக கடனுதவி பெற்று புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி மாவட்டத்திற்கு நடப்பாண்டிற்கான இலக்கீடாக 135 விண்ணப்பங்களுக்கு ரூ.3 கோடியே 90 லட்சம் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவைதொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் கடன் உதவிபெற்றுதொழில் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும், உற்பத்திப்பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித்தகுதி தேவையில்லை. இதற்கு அதிகமான மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விவசாயம், போக்குவரத்து, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு போன்ற பண்ணை சார்ந்த தொழில்கள், புகையிலை, பாலித்தீன் பைகள் உற்பத்தி (20 மைக்ரானுக்கு குறைவு) தொழில்கள் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்பட மாட்டாது. இத்திட்டத்தின் கீழ் வங்கியால் ஓப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகப்பட்சமாக நகர்புறத்தில் 25 சதவீதம், கிராமபுறத்தில் 35 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. சொந்த மூலதனம் பொதுபிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும் மற்றபிரிவினருக்கு 5 சதவீதம் ஆகும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், திருவாரூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04365-224402 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: