பட்டுகோட்டையில் விதிமுறைகளை மீறிய தனியார் உரக்கடை உரிமம் தற்காலிக ரத்து

பட்டுக்கோட்டை, மே27: பட்டுக்கோட்டையில் உரக்கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை மீறியதால் தனியார் உரக்கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வேளாண் உதவி இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டார். உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி அதிகபட்ச விற்பனை விலையை தாண்டி உரங்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் உரக்கடைகளுக்கு பட்டுக்கோட்டை வேளாண் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி பலமுறை எச்சரித்தும் சில தனியார் உரக்கடைகள் அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்வதாக புகார்கள் தொடர்ந்து வந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மாலதி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் புகார் வந்த அந்த தனியார் உரக்கடைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி அதிகபட்ச விற்பனை விலையை தாண்டி உரங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த தனியார் உரக்கடையின் உர உரிமம் 14 நாட்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் தற்சமயம் உள்ள உரங்கள் இருப்பு 14 நாட்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதை மீறி உரவிற்பனை செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட உரக்கடையின் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று வேளாண் உதவி இயக்குநர் மாலதி எச்சரித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி அதிகபட்ச விற்பனை விலையை தாண்டி உரங்கள் விற்பனை செய்யக்கூடாது. உரங்கள் வாங்க வரும் விவசாயிகளிடம் அவருடைய நில ஆவண உடமை மற்றும் பரப்பின் அளவு ஆகியவற்றை வாங்குவதுடன் நில உரிமையாளர் மற்றும் சாகுபடியாளருக்கு தான் உரம் வழங்கப்படுகிறதா என்பதை வேளாண் துறை மூலம் உறுதி செய்த பின்பு உர விற்பனை செய்ய வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உரக்கடைகளில் எக்காரணத்தைக் கொண்டும் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் தனியார் உரக்கடைகளின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: