மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை எம்பிக்கள் குழு ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை துவங்குவதற்கு, கடந்த 23.2.2010ம் ஆண்டு, அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, அந்த ஆலை கடந்த 2013ம் ஆண்டு முதல் இயங்குகிறது. இங்கு தினமும் 10 கோடி லிட்டர் கடல்நீரை சுத்திகரிப்பு செய்து திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெருங்குடி ஆகிய பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனுப்பப்படுகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியைபோக்கும் வகையில் கடந்த 2003 - 2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் சூளேரிக்காடு ஆகிய இடங்களில் தினமும் தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்கள், சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காட்டில் இயங்கும் கடல்நீரை குடிநீராக்கும் முதலாவது ஆலையின் உற்பத்தி செயல்பாடுகள் குறித்து, ஒன்றிய நீர்வளங்கள் மீதான கூட்டு ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள எம்பிக்கள் 11 பேர், எம்பி சஞ்சய் ஜெய்சுவால் தலைமையில், நேற்று பார்வையிட்டனர். தொடர்ந்து, அவர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க டெல்லியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை மின்விளக்கு வெளிச்சத்தில் சுற்றிப் பார்த்தனர்.

Related Stories: