பூந்தமல்லி அருகே தலை கைகள் இல்லாமல் எரிக்கப்பட்டவர் ஆட்டோ டிரைவரா? போலீஸ் தீவிர விசாரணை

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே தலை கைகள் இல்லாமல் கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் மாங்காட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரா என போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்திலிருந்து கண்ணபாளையம் செல்லும் சாலை உள்ளது. இங்கு, குப்பை கிடங்கு அருகே தலை மற்றும் இரண்டு கைகள் இல்லாமல் ஒரு ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதாக 2 நாட்களுக்கு முன்பு திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீசார்,  கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட நபர் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதில், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. எனவே, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அந்த வழியாக வந்து சென்ற வாகனங்கள் குறித்தும் விசாரணை செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றி புகார்கள் குறித்தும் ஆய்வு செய்து வந்தனர். இதனை தொடர்ந்து, மாங்காட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதீன் என்பவரை காணவில்லை என அவரது பெற்றோர் நேற்று மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாங்காடு போலீசார் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட உடல் குறித்து அடையாளம் காட்டும்படி திருவேற்காடு போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து,  தற்போது கொலை செய்யப்பட்ட நபரின் சடலம்,  காணாமல் போன சிராஜூதீன் உறவினர்கள் சொல்லும் அடையாளங்கள் ஒத்து போவதாக கூறப்படுகிறது.  

மேலும், இறந்தவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசும்போது சுவிட்ச் ஆப் என வருகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு கொலை செய்யப்பட்ட நபர் சிராஜூதீன் தானா என்பது முழுமையாக தெரியவரும் என திருவேற்காடு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து துணை நடிகை ஒருவரை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் சிராஜூதீன் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த கொலைக்கான காரணம் என்ன? அவர் எங்கு, எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? அவரது தலை மற்றும் கைகள் எந்த பகுதியில் வீசப்பட்டுள்ளது என்பது குறித்து திருவேற்காடு போலீசார், தனிப்படைகள் அமைத்தும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: