யார் பெரிய ரவுடி என்ற தகராறில் 3 பேரை கொலை செய்ய தயாராக இருந்த 7 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது: 12 கத்தி, ஆசிட், 5 பைக், கஞ்சா பறிமுதல்

அம்பத்தூர்: கொரட்டூர் அடுத்த மாதனாங்குப்பம், பஜனை கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர்கள், சந்தேகத்திற்கிடமாக தங்கி இருப்பதாக கொரட்டூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 12 பேர் கொண்ட தனிப்படை போலீசார், நள்ளிரவு 1.30 மணிக்கு அந்த வீட்டை சுற்றி வளைத்து, உள்ளே நுழைந்தனர். அங்கு, ஏராளமான கத்திகளுடன் 7 பேர் கஞ்சா போதையில் இருப்பது தெரிந்தது. அவர்களை துப்பாக்கி முனையில் பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த பிரகாஷ் (27), ரெட்டேரி, லட்சுமிபுரம், கல்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (26), புத்தாகரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (20), வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (29), ஐசக் ராபர்ட் (19), பெரம்பூரை சேர்ந்த ஈசாக் (22), திருமுல்லைவாயலை சேரந்த கிருஷ்ணகுமார் (19) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், பிடிபட்ட ஆவடி பிரகாஷ், வில்லிவாக்கம் பாலகிருஷ்ணன் தரப்புக்கும், பெரம்பூர் காந்தி சிலை பகுதியை சேர்ந்த பாக்சர் விக்கி, அவரது தம்பி சீனா தரப்பினருக்கும் இடையே கஞ்சா விற்பதில் முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருதரப்பினரும் தொழில் போட்டி மற்றும் யார் பெரிய ரவுடி என்பதில் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெரம்பூர் பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், பாக்சர் விக்கி, சீனாவை பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்கியுள்ளனர். உடனே பாக்சர் விக்கி மற்றும் சீனா ஆகியோர், தங்கள் கூட்டாளிகள் 8 பேரை அங்கு வரவழைத்துள்ளனர். கஞ்சா போதையில் அங்கு வந்த அவர்கள், ‘‘எங்க ஏரியாவுக்கே வந்து எங்க நண்பர்களை அடிப்பீர்களா,’’ எனக்கூறி பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணனை அடித்துள்ளனர். அப்போது, அந்த 8 பேரில் தினேஷ் என்பவர், பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணனை அரை நிர்வானப்படுத்தி அசிங்கப்படுத்தி, எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனால், தங்களை அவமானப்படுத்திய பாக்சர் விக்கி, அவரது தம்பி சீனா மற்றும் தினேஷை பழிக்குப்பழியாக நேற்று காலை  கொல்ல திட்டமிட்டு, தங்களது நண்பரின் வீட்டில் தயாராக இருந்தபோது, போலீசில் சிக்கியது தெரிந்தது. இதையடுத்து 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 ஆசிட் பாட்டில், 12 கத்திகள், 5 பைக், 7 செல்போன், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ஆவடி பிரகாஷ், ரெட்டேரி பிரகாஷ், புத்தாகரம் ஜெயக்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் கஞ்சா விற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் துரித நடவடிக்கையால் நேற்று காலை நடக்க இருந்த 3 கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டது.

Related Stories: