70 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

பல்லாவரம்:  சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு, கனமழை பெய்தபோது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 29 ஆயிரத்து 600 கனஅடி நீர் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் அடையாறு ஆற்றில் சேரும் இடத்தில் ஆற்றின் அகலம் 43 மீட்டர் மட்டுமே இருந்தது. ஆனால் அடையாறு ஆற்றின் அகலம் 62 மீட்டர். இதன் அகலம் வெகுவாக குறைந்திருந்ததால், அந்த இடத்தில் தண்ணீர் வெளியேறுவது மிகவும் சிரமமாகமாக இருந்தது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாம்பரம் அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் நீர் சூழ்ந்தது. பின்னர், பேரிடர் மேலாண்மை வருவாய் கமிஷனர் அடையாறு ஆற்றில் திருநீர்மலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அதற்கான தீர்வு காண அறிவுறுத்தினார். மேலும், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நிறுவனம் அடையாறு ஆற்றை அகலப்படுத்த நில எடுப்புக்கு அறிவுறுத்தினார்.

அதை தொடர்ந்து, தமிழக அரசின் நீர்வளத்துறை, வெள்ளத்தடுப்பு பணி சார்பில், அடையாறு ஆற்றை அகலப்படுத்த ₹70 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், செம்பரம்பாக்கம்  உபரிநீர் கால்வாய் கலக்கும் இடத்திலிருந்து, அனகாபுத்தூர் பாலம் வரை  அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று  தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘செம்பரம்பாக்கம் ஏரி கலங்கல் நீர் செங்குத்தாக அடையாறு ஆற்றில் கலப்பதால், கலங்கல் தண்ணீர் வெளியேறும் வாய்காலின் இடது பக்க கரையை நன்றாக வளைத்து ஆற்றில் சேர்க்கவும், அடையாறு ஆற்றில் 40,000 கன அடி தண்ணீர் எளிதாக வெளியேறும் வகையிலும் 120 மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது.

மேலும், இடது பக்கத்தில் இரும்பு கம்பிகள், கான்கிரீட் தடுப்பு சுவர் 5.5 மீ உயரம், 1200மீ நீளத்திற்கும், வலது பக்கத்தில் 200மீ நீளத்திற்கும், மீதமுள்ள 1200மீ நீளத்திற்கு இடதுபக்க கரை பலப்படுத்தப்படும். இந்த பணிகள் நிறைவடைந்தால், மழைக் காலங்களில் சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வரை எளிதில் அடையாறு ஆற்றில் செல்லும். இதனால் குடியிருப்புகள் பாதிக்கப்படாது,’’ என்றார்.நிகழ்ச்சியில்,  குன்றத்தூர் நகரமன்ற தலைவர் சத்தியமூர்த்தி, பொதுப்பணி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: