மழைநீர் கால்வாய்களில் விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய 2,983 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் பொதுமக்கள் கழிவுநீரை வெளியேற்றக்கூடாது என்றும், இதை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது. ஆனால், அதை மீறி பல இடங்களில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஆய்வு நடத்தி, இதுபோன்ற விதிமீறல் இணைப்புகளை துண்டிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாநகராட்சி உதவி/ இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர், கழிவுநீர் அகற்றல் வாரிய உதவி பொறியாளர் கொண்ட குழு மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நடத்திய சோதனையில் 3,799 கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டு, கழிவுநீர் வெளியேற்றி வந்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து, முதற்கட்டமாக 2,983 முறையற்ற கழிவுநீர் இணைப்புகள் கண்டறிந்து அகற்றப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் 1,628 விதிமீறல் கழிவுநீர் இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ₹19.52 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: