கம்பம் அருகே மாமனாரால் தீ வைக்கப்பட்ட மருமகளும் பரிதாப பலி

கம்பம், மே 26: கம்பம் அருகே, நாராயணத்தேவன்பட்டியில் உள்ள மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (25), கூலித்தொழிலாளி. இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுகப்பிரியா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை. அருண்பாண்டியனின் தந்தை பெரியகருப்பன் (53), மருமகளிடம் வரதட்சனை கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்து வந்துள்ளார். கடந்த 16ம் தேதி இரவு மதுபோதையில் பெரியகருப்பன், மருமகள் சுகப்பிரியா, பேரன் யாகித் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். தீப்பிடித்ததில் கதறிய சுகப்பிரியா மற்றும் குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை யாசித் உயிரிழந்தான். சுகப்பிரியா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: