அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சியில் ரூ.184 கோடி வேறு பணிகளுக்கு மாற்றி விடப்பட்டுள்ளது

பீளமேடு,மே26:தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள், அரசு சார்பாக மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மண்புழு மூலம் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து ஜி.சி.டி. தடாகம் சாலையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டனர்.இந்நிலையில் 2வது நாளாக நேற்று ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பாக வாலாங்குளத்தை பார்வையிட்டனர். பின்னர், அவிநாசி ரோடு மேம்பால பணி, ஜெய் ராம் நகரில் 24 மணி நேரம் குடிநீர் திட்டம், வெள்ளலூரில் குப்பை கிடங்கு மையத்தை பார்வையிட்டனர். அங்கு பயோ மைனிங் மூலம் குப்பைகள் அகற்றப்படுவது தொடர்பாக கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து ஒண்டிப்புதூரில் சுத்திகரிப்பு நிலையம், பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டனர்.அதன்பின் தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு கடந்த 2 நாட்களாக கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 7  மணி நேரம் ஆய்வு நடத்தப்பட்டு கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த குழுவின் முக்கிய நோக்கம் என்னவென்றால்  மக்கள் வரிப்பணம் எப்படி செலவு செய்யப்படுகிறது? அந்த செலவை இன்னும் எப்படி கட்டுப்படுத்த முடியும்? இந்த  செலவு எந்த நோக்கத்துக்காக செய்யப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியதா? என்பதை பார்ப்பது தான் இந்த  மதிப்பீட்டு குழுவின் நோக்கம், பணி ஆகும். இதற்காக அனைத்து கட்சிகளிலிருந்தும் 10 எம்.எல்.ஏ.க்கள் இடம்  பெற்றுள்ளனர். இந்த ஆய்வு கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து சட்டமன்றத்தில் பதிவு செய்யப்படும்.கோவை மாவட்டத்தில் பஸ் வசதி கேட்டு பெரும்பாலான கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நிலுவையில் குறிப்பாக நொய்யல் ஆற்றில் மாசு கலப்பது குறித்த பிரச்னைகள் குறித்து கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. கோவையில் ஒரு சில இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதன் மீது அரசு  நடடிவடிக்கை எடுத்து வருகிறது. கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி குறித்தும் கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.

இந்த  பிரச்னைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நகரில்  இணைப்பு சாலைகள் சரியில்லை, மாற்றுப்பாதைகள் சரியில்லை என்று கூறப்பட்டன. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் ஜி.என். மில் மேம்பாலம் 4 மாதத்திலும், பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் 9 மாதத்திலும் கட்டி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். உழவர் சந்தையில் உள்ள குளறுபடிகள் சரி செய்யப்படும். இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.)சார்பில் எலக்ட்ரானிக்  துறையில் ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று மனு அளித்தனர். அவற்றை மாநில திட்ட கமிஷன் மூலம்  அளியுங்கள் என்று தெரிவித்துள்ளோம். மேலும் கோவையில் தயாராகும் பொருட்களை துறைமுகத்துக்கு கொண்டு  செல்வதில் சில பிரச்னைகள் இருப்பதாக கூறினார்கள். கோவை-நாகப்பட்டினம் இடையே தொழிற் காரிடர் அமைக்க  வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு  செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் சரியான நோக்கத்துக்காக அரசு பணம் செலவிடப்பட்டுள்ளதா என்று இந்த குழு ஆய்வு  செய்துள்ளது. இந்த குழுவில் அரசியல் கிடையாது. இந்த அரசு, அந்த அரசு என்று பாகுபாடு கிடையாது. அதனால்  தான் இதில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் இடம் பெற்றுள்ளனர். அரசு பணம் எந்த நோக்கத்துக்காக  பெறப்பட்டதோ அதற்காக செலவிடப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்படும். அதன்படி கோவை மாநகராட்சியில்  கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக 184 கோடி ரூபாய் வேறு பணிகளுக்கு மாற்றி விடப்பட்டுள்ளது இந்த  ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது எந்த நோக்கத்துக்காக அந்த பணம் செயல்படுத்தப்பட வேண்டுமோ அதற்கு  பயன்படுத்தாமல் வேறு நோக்கத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. அதற்கு சில காரணங்களையும் நாங்கள் சொல்லியுள்ளோம். அதுபற்றி ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்  சமீரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: