மானாவாரி நிலங்களில் பாதுகாப்பு யுக்தி மண்ணின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேளாண் வல்லுநர் யோசனை

ஈரோடு,  மே 26: ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சரவணகுமார் கூறியதாவது:மழையை  மட்டுமே ஆதாரமாக கொண்டு விவசாயம் செய்வதை மானாவாரி விவசாயமாகும். முந்தைய  பயிர் அறுவடைக்கு பின் நிலங்களை நன்கு உழவு செய்ய வேண்டும். ஆழமாக உழவினை  மேற்கொள்வதன் மூலம் மண்ணின் கெட்டிதன்மை அல்லது இறுக்கம் குறைந்து மண்  இலகுவாகி விடும்.

இதன்மூலம், மண்ணின் நீர்பிடிப்பு திறனையும் அதிகரித்து  பயிர்கள் வேகமாக வளரும். பயிர் அறுவடைக்கு பின்னர் அல்லது முதல் மழை  கிடைக்கப்பெற்ற உடன் உழவு செய்தவன் வாயிலாக மழை நீர் நிலங்களில்  தேக்கப்படுவதுடன் நீர் உறிஞ்சும் தன்மையும் அதிகரிக்கும்.  மானாவாரி நிலங்களில் உழவினை மேற்கொள்ளும் போது  நிலத்தின் சரிவிற்கு குறுக்கே உழவு செய்வது மிகவும் அவசியமாகும். நிலத்தை  சுற்றி வரப்புகள் அமைத்து வரப்பின் உட்புறம் குழிகள் அமைப்பதன் மூலம் மண்  அரிமானம் தடுக்கப்படுவதுடன், மேல் மண்ணிலுள்ள சத்துக்கள் அரிமானமாவது  தடுக்கப்பட்டு குழிகளில் சேகரிக்கப்படுகிறது.

மேலும் குழிகளின் அருகே  பசுந்தழைகளை தரக்கூடிய மரங்கள் நடுவதன் மூலம் நிலத்திற்கு தேவையான உரங்கள்  நிலத்திற்கு நேரடியாக கிடைக்கும். உழவு செய்த பிறகு நிலத்தை சிறுசிறு  பாத்திகளாக பிரிப்பதன் மூலம் நிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை நீரை  சேகரித்து, மண்ணின் ஈரப்பதத்தை மேம்படுத்த முடியும். சரியான விளைச்சலை பெற மண் வளம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை  போன்றவை அவசியமாகும். மானாவாரி நிலங்களில் பசுந்தாள் உரங்களை பயிரிட்டு  உழவு செய்தல், பண்ணைக்கழிவுகளை மக்க வைக்க எருக்குழிகள் அமைத்தல் மற்றும்  ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து நிலங்களில் இடுதல் போன்றவற்றின் மூலம்  மண்ணின் சத்துக்களையும், நிலங்களின் உற்பத்தி திறனையும் அதிகரிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: