ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்

விருத்தாசலம், மே 26: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடி வெள்ளாற்றின் கரையோரம் இளம்பெண் ஒருவர் நேற்று ரத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்தப் பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 21 வயது பட்டதாரி இளம்பெண் என்பதும், கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகின்ற 10ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், அந்த வாலிபர் அவரை வரவழைத்து கார்மாங்குடி வெள்ளாற்றங்கரையில் இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து  இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories: