×

குடிநீர் தட்டுப்பாடு மலை கிராமத்தில் மக்கள் போராட்டம்

கடலூர், மே 26: கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவந்திபுரம் ஊராட்சியில் மலை புதுநகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மோட்டார் அடிக்கடி பழுது ஏற்படுவதால் இவர்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்கவில்லை எனக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கடந்த பல மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது கோடை காலம் என்ற நிலையில் போதுமான குடிநீர் இல்லாமல் பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட திருவந்திபுரம் ஊராட்சி மலை புதுநகர் பகுதியில் காலி குடத்துடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து கடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். திருவந்திபுரம் ஊராட்சி மலை பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபோன்ற நிலையில் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தனர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...