கடலூர் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா

கடலூர், மே 26: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பணியின்போது இவர்கள் செல்போன் பயன்படுத்துவதாக கூறி, கடந்த வாரம் பணிக்கு வந்த பெண் ஊழியர்களை அந்த தனியார் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20ம் தேதி காலை பணிக்கு வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் மருத்துவமனையின் வாயிலிலேயே திரண்டு நின்றனர். அப்போது அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் வந்து அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் பணிக்கு சென்றனர்.

இந்நிலையில், தனியார் ஒப்பந்த நிறுவனம், அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய மேலாளரை பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணிக்குச் செல்லாமல், மருத்துவமனையின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் குமார் மற்றும் தனியார் நிறுவனத்தின் அலுவலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தனியார் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் வந்தபின், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறினர். இதை ஏற்ற துப்புரவு பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: