திருமழிசை பேரூராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளர் ஜெ.மகாதேவன் வெற்றி

திருவள்ளுர்: நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திருமழிசை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், பாமக மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.கடந்த மார்ச் 4ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவுக்கு 7  ஓட்டுக்களும், அதிமுகவுக்கு 6 ஓட்டுகளும் போடப்பட்டிருந்தது. ஆனால் 2 ஓட்டுகள் செல்லாத ஓட்டுக்காக போடப்பட்டிருந்ததால் பேரூராட்சித் தலைவராக 7 ஓட்டுக்களை பெற்ற  திமுக வேட்பாளர் உ.வடிவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிமுக, பாமக, சுயேட்சை ஆகிய கவுன்சிலர்கள் இரண்டு முறை தேர்தலை புறக்கணிப்பு செய்ததால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பாமக கவுன்சிலர் ராஜேஷ், சுயேட்சை கவுன்சிலர் லதா ஆகிய 2 கவுன்சிலர்களும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இதனால் திருமழிசை பேரூராட்சியில் திமுகவின் பலம் 7 லிருந்து 9 ஆக உயர்ந்தது. இந்நிலையில் அதன்படி நேற்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கி.ரவி ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

இந்தத் தேர்தலில் திமுக சார்பில் 8 வது வார்டு கவுன்சிலர் ஜெ.மகாதேவனும், அதிமுக சார்பில் 6 வது வார்டு கவுன்சிலர் வீ.வேணுகோபாலும் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜெ.மகாதேவன் 15 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஆனால் அதிமுக வேட்பாளர் வீ.வேணுகோபால் 5 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். பேரூராட்சி துணைத் தலைவராக வெற்றி பெற்ற ஜெ.மகாதேவனுக்கு திமுக நகர செயலாளர் தி.வே.முனுசாமி, பேரூராட்சி தலைவர் உ.வடிவேல் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஆளுயர ரோஜா மாலைகள் அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: