கம்பம் பகுதியில் போலி டாக்டர்கள் அதிகரிப்பு ‘எட்டை’ கூட தாண்டாதவர்கள் ஊசி போடும் அவலம்

கம்பம், மே 22: கம்பம் பகுதியில் 8ம் வகுப்பு வரை படித்தவர்கள் மருத்துவம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. எனவே போலி டாக்டர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாக்கம் ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக சாரல் மழை மற்றும் மேக மூட்டத்துடன் காற்று பலமாக வீசி வருவதால், கம்பம் பகுதியில் மர்மகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கே.கே.பட்டி, என்.டிபட்டி, சுருளிப்படி, ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி மற்றும் கூடலூர் பகுதிகளில் அதிகளவில் போலி டாக்டர்கள் உலா வருகின்றனர். 8ம் வகுப்பு வரை படித்து நர்ஸாக பணிபுரிந்த நபர்கள் ஊசி போட  பழகி கொண்டு முறையான டாக்டர்கள் இல்லாத கிராமங்களை தேர்வு செய்து அங்கு மருத்துவம் பார்க்க தொடங்கி விடுகின்றனர்.

மேலும் ஓரிரண்டு ஊசி, மாத்திரை பெயர்களை தெரிந்து கொண்டு அதனையும் தாங்களே பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். தற்சமயம் காய்ச்சல் பரவல் காலம் என்பதால் பொதுமக்கள் இம்மாதிரியான போலி மருத்துவரை அதிகளவில் நாடி செல்கின்றனர். முறையான மருத்துவ அறிவு இல்லாத நிலையில், பொதுமக்கள் கூறும் நோய்களுக்கு பொதுவான பாராசிட்டமல், அமாக்ஸிலின், அஜித்ரோமைசின் போன்ற மாத்திரைகளையும், அதிக பவர் டோஸ் நிறைந்த வலி ஊசிகளையும் போட்டு வருகின்றனர். இதுபோன்ற போலி டாக்டர்கள் கருகலைப்பு விசயங்களில் அதிகளவில் ஈடுபடுவதால் வெளி உலகத்துக்கு தெரியாத உயிரிழப்பு ஏற்படுகிறது. பொதுமக்களிடம் இயலாமையை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் கல்லா கட்டி வருகின்றனர். இவர்களை கண்டுபிடித்து களையெடுக்க மாவட்ட மருத்துவ துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதி கிராமங்களில் முறையான மருத்துவர்கள் இல்லாத பகுதிகளை தேர்ந்தெடுத்து போலி டாக்டர்கள் காலை மாலை என இரு வேளையும் வீடு வீடாக சென்று ஊசி மாத்திரை கொடுத்து அதிக பணம் சம்பாதிக்கின்றனர். மேலும் அங்கே கிளினிக் அல்லது மெடிக்கல் ஷாப் வைத்து பொதுமக்களுக்கு வைத்தியம் பார்க்கின்றனர். இவர்கள் கொடுக்கும் மருந்தின் பின் விளைவுகள் பற்றி தெரியததால் பொதுமக்களும் இவர்களுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான். எனவே  மாவட்ட சுகாதார துறையினர் போலி டாக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: