தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரி, உறவினர்கள் சொத்துக்கள் முடக்கம் எஸ்பி அதிரடி நடவடிக்கை

தேனி, மே 25: தேனி மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், கஞ்சா வியாபாரி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தை  சேர்ந்தவர் முருகன் என்ற கீரிப்பட்டி முருகன் (52). இவர் கஞ்சா கடத்துதாக கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மயிலாடும்பாறை போலீசாருக்கு கிடைத்த தகவல்கள் வந்தது. இதனையடுத்து போலீசார்  காமன்கல்லூரில் உள்ள முருகன் தென்னந்தோப்பிற்கு சென்று சோதனையிட்டபோது கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த  220 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது சம்பந்தமாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இவ்வழக்கில் முருகனுக்கு 10 வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ 1 லட்சம் அபராதம் விதித்து தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தென்மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் திண்டுக்கல் போலீஸ் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆகியோர் தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தண்டனை பெறுவோர் மற்றும் அவரது குற்றச் செயலுக்கு உடந்தையாக உள்ள அவர்களது உறவினர்களின் சொத்துக்களையும் முடக்கி, விசாரணைக்குப்பின் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்க ஆண்டிபட்டி போலீஸ் டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. குமணன்தொழுவில் உள்ள முருகனின் மைத்துனர் நாகராஜ்க்கு சொந்தமான சுமார்  ரூ.12 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் காலி மனையிடம், அவரது சகோதரி இந்திராணிக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான காலிமனையிடம் மற்றும் முருகனின் ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் உட்பட ரூ. 22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்களை நேற்று தேனி போலீஸ் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் முடக்க உத்தரவிட்டார்.இதுகுறித்து எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், ஓடைப்பட்டி  பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பூபாலன், முரளிதரன், விஜயன், சரத், கணேசன், அருண் பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு சொந்தமான  9 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் இரண்டாவது முறையாக நேற்று முருகனுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவரது உறவினர்களான நாகராஜ் மற்றும் இந்திராணி ஆகியோரின் சொத்துக்கள் முடக்கபட்டுள்ளது. மேலும் கடந்த 10 மாதங்களாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற 46 வழக்குகளில் தொடர்புடையவர்களின் 76 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இதேபோல தற்போது மேலும் 4 வழக்குகள் மீது, 6 வங்கிக் கணக்குகள் முடக்குவதற்கான பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Related Stories: