காலம் தவறி பெய்த மழையால் காய்கறிகள் அழுகியது

ஊட்டி, மே 25:நீலகிரியில் காலம் தவறி பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அழுகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்பின் மழை குறைந்தே காணப்படும். குறிப்பாக, ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இது போன்ற சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்ய தயக்கம் காட்டுவார்கள்.

ஆனால், இம்முறை கடந்த இரு மாதங்களாக ஊட்டியில் மழை பெய்தது. இது மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. அதேசமயம், தாழ்வான பகுதிகளில் பயிர் செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட் உள்ளிட்ட சில காய்கறிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாய நிலங்களில் கேரட் அழுகி காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக காலம் தவறி பெய்த மழையே என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: