×

ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்- பரபரப்பு

புதுச்சேரி,  மே 25: புதுச்சேரி,  மேட்டுப்பாளையம் காவல் நிலையம் எதிரே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்  ஒருவர் நேற்று முன்தினம் இரவு திடீரென 40 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி  தற்கொலைக்கு முயன்றார். வடக்கு காவல் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற இச்சம்பவத்தால் பொதுமக்கள் நள்ளிரவில் அங்கு திரண்டனர். டவரில்  ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அந்த வாலிபரின் ஊர், பெயர்  விபரம் எதுவும் தெரியாத நிலையில் டவரில் டார்ச் லைட் அடித்த சமூக  ஆர்வலர்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்... உடனே  கீழே இறங்கி வருமாறு... மாறிமாறி அழைத்தனர்.

ஆனால் அந்த நபர், அதை  சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டே இருந்தார்.  இதையடுத்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் எஸ்ஐ புனிதராஜ் தலைமையிலான  போலீசார், அவருக்கு அறிவுரை கூறிய நிலையிலும் ஏற்காமல் ஒரு மணி  நேரத்திற்கும் மேலாக டவரிலேயே அவர் நின்றிருந்த நிலையில் கோரிமேடு  தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு  வீரர்கள் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அந்த  வாலிபரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். பின்னர் அவரிடம் மேட்டுப்பாளையம்  காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

இதில் எஸ்பி அலுவலகம் முன்பு செல்போன்  டவர் மீது ஏறி தற்ெகாலை மிரட்டல் விடுத்தது முதலியார்சாவடியைச் சேர்ந்த  அய்யப்பன் (29) என்பதும், மனநிலை பாதித்த இவர் செல்போன் டவர் மீது ஏறி  தற்கொலை மிரட்டல் விடுத்ததும் அம்பலமானது. இதையடுத்து அவரை காவல் நிலையம்  அழைத்துச் சென்ற மேட்டுப்பாளையம் போலீசார், பெற்றோர் இல்லாத நிலையில் அவரது  மாமா ராமுவை அங்கு வரவழைத்து அய்யப்பனை ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை  தொடர்ந்து நேற்று மதியம் புதுச்சேரி ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே  டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏறி  தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரது சத்தம் கேட்டு சிக்னலில் பணியிலிருந்த  வடக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த வாலிபரை கீழே  இறங்குமாறு கெஞ்சினர்.

ஆனால் அவர் மறுத்து தொடர்ந்து உயர்மின் அழுத்த  கம்பத்தில் இருந்து மிரட்டலை தொடர்ந்ததால் பரபரப்பு நிலவியது.   இதையடுத்து போலீசார், கனரக லாரியை டிரான்ஸ்பார்மர் அருகே நிறுத்தி அதில்  ஏறி வாலிபரை பத்திரமாக மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில்,  மேட்டுப்பாளையத்தில் மிரட்டல் விடுத்த அய்யப்பன்தான் மருத்துவமனையில்  இருந்து தப்பிவந்து மீண்டு்ம டிரான்ஸ்பார்மரில் ஏறி மிரட்டியது தெரியவந்தது.  இதையடுத்து அவர் மீண்டும் எச்சரிக்கப்பட்டு உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டார்.

Tags : Rajiv Gandhi Square ,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...