பெண்ணாடம் அருகே அரசு பேருந்து நடத்துனர், மனைவியை கத்தி முனையில் மிரட்டி 10 பவுன் பறிப்பு

பெண்ணாடம், மே 25: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ள வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசெல்வம் (40). அரசு போக்குவரத்து கழகம் விருத்தாசலம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புகழ்செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தம்பதியினர் மற்றும் பிள்ளைகள் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த புகழ்செல்வியை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயின், தோடு, மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். கணவர் மற்றும் பிள்ளைகள் தடுக்க முயன்ற போது கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அவர்களும் பயந்து போய் அப்படியே நின்று விட்டனர். பின்னர் அந்த கும்பல் கொள்ளையடித்த நகைகளுடன் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து தம்பதியினர் இருவரும் சத்தம் போட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது கொள்ளை கும்பல் மாயமாகிவிட்டனர்.

இதுகுறித்து ராஜசெல்வம் அளித்த தகவலின் பேரில் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விடப்பட்டது. ஆனால் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். மேலும் தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன 10 பவுன் நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும். கத்தி முனையில் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் மனைவியை மிரட்டி தாலி செயின் உள்பட 10 பவுன் நகைகளை மர்ம கும்பல் பறித்து சென்ற சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: