பலாப்பழ குடோனுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு ₹3 லட்சம் பழங்கள், பைக் எரிந்து சேதம்

பண்ருட்டி, மே 25: பண்ருட்டி அருகே பலாப்பழ குடோனுக்கு மர்ம நபர்கள் தீவைத்ததால் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பலாப்பழங்கள், பைக் ஆகியவை எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அருகே கொட்டிகோணங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (56). இவர் பணிக்கன்குப்பத்தில் பலாப்பழம் குடோன் வைத்துள்ளார். விவசாயிகளிடம் பலாப்பழம் வாங்கி வெளியூர்களுக்கு மொத்தமாக லாரிகளில் ஏற்றுமதி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் பலாப்பழ குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அந்த குடோனுக்கு தீ வைத்துள்ளனர். இதில் சுமார் 4 டன் எடையுள்ள பலாப்பழங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை எரிந்து தீக்கிரையானது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து பலாப்பழ குடோனுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: