தூத்துக்குடி தனியார் தொழிற்சாலை ஊழியர் சாவு நெல்லை மருத்துவமனையில் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை, மே 25: திருச்செந்தூரைச் சேர்ந்த முருகனின் மகன் மோகன் (29). தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்படும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக எலெக்ட்ரிஷியனாக வேலை பார்த்துவந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் பகலில் தொழிற்சாலையில் வழக்கம்போல் வேலை பார்த்துக்கொண்டிருந்த இவர், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட சக ஊழியர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை வண்ணார்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்து அங்கு திரண்ட திராவிட தமிழர் கட்சி நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் தமிழரசு, தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, ஆதிதமிழர் கட்சி மாநகர செயலாளர் இளையராஜா மற்றும் பல்வேறு அமைப்பினர் இதை கண்டித்தும், உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 தகவலறிந்து விரைந்து வந்த பாளை போலீசார் சமரசப்படுத்தியதோடு தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுப்பதாக  போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்பிறகே அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதையடுத்து மோகனின் உடலை கைப்பற்றிய போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: