திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 31ம் தேதிக்குள் முடிவடையும் கண்காணிப்பு அலுவலர் பேச்சு

திருவாரூர், மே 25: திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வரும் 31ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளதாக மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் அரசு செயலாளருமான கிர்லோஷ்குமார் தலைமையிலும், கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் பேசுகையில், மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி ஆயிரத்து 200.56 கிமீ நீளத்திற்கு ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.தஞ்சை காவிரி வடிநில கோட்டம் மற்றும் வெண்ணாறு வடிநில கோட்டம் சார்பில்115 பணிகள் எடுக்கப்பட்டு இதுவரையில் 79.1சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தூர்வாரும் பணியில் 177 ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் 31ம் தேதிக்குள் மாவட்டம் முழுவதும் அனைத்து தூர்வாரும் பணிகளையும் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: