அடையாறில் துணிகர சம்பவம் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம்: வாலிபர் கைது

வேளச்சேரி: அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அடையாறு பகுதியில் தனியாக வசித்து வருபவர் சதா (43, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 20ம் தேதி வேலை முடிந்து சதா வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென வீட்டுக்குள் புகுந்து கதவை உள்பக்கமாக தாழிட்டு உள்ளார். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி, சதா வாயில் துணியை திணித்து, கைகளை கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதை தனது செல்போனில் படம் பிடித்த மர்ம நபர், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், இந்த ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டிவிட்டு தப்பியுள்ளார்.

இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சதா புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், திருவல்லிக்கேணியை சேர்ந்த விஷால் (23) என்பவர் சதாவை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்தனர். அதில், சதா வீட்டில் தனியாக வசிப்பதை அறிந்து, சம்பவத்தன்று அவரை பின் தொடர்ந்து சென்று, கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, ஆபாச படத்தை அழித்தனர். பின்னர், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: