மனைவி, மகனை வெட்டி கொன்றுவிட்டு 8 ஆண்டாக தலைமறைவாக இருந்த கணவன் பிடிபட்டார்: மாமியாரை கொல்ல வந்தபோது போலீசார் சுற்றிவளைத்தனர்

தண்டையார்பேட்டை: மனைவி, மகனை வெட்டி கொலை செய்துவிட்டு 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.தண்டையார்பேட்டை, வஉசி நகர், 14வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி (27). இவருக்கும், மாரி (30) என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகேஷ்குமார் (7) என்ற மகன் இருந்தார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட மாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, குணசுந்தரி, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ் (எ) டேஞ்சர் ராஜ் (40) என்பவரை 2வது திருமணம் செய்தார். இவர்கள் சூலூர்பேட்டையில் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுடன் குணசுந்தரியின் மகன் மகேஷ்குமாரும் வசித்து வந்தார்.ஒரு மாதம் குடும்பம் நடத்திய நிலையில், திடீரென ராஜிக்கும், குணசுந்தரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான், ராஜ் ஏற்கனவே திருணமானவர் என்பதும், அவருக்கு 2 மனைவிகள் என்பதும், அவர்கள் பிரிந்து சென்றதால் தன்னை திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதனால், தகராறு வலுத்தது. ஆத்திரத்தில் ராஜியை விட்டு பிரிந்த குணசுந்தரி, தனது மகனை அழைத்துக் கொண்டு, தண்டையார்பேட்டை வஉசி நகரில் உள்ள தாய் நாகவள்ளி வீட்டுக்கு வந்துவிட்டார்.

இதையடுத்து ராஜ், தண்டையார்பேட்டைக்கு வந்த ராஜ், தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி குணசுந்தரியை அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் வராததால் ராஜ் ஆத்திரமடைந்துள்ளார். அப்போது, அக்கம் பக்கத்து வாலிபர்களுடன் குணசுந்தரி பேசியதால் ராஜ்க்கு ஆத்திரம் அதிகரித்தது. இதுதொடர்பாக, 15.11.2014 அன்று நடந்த தகராறில் ராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசுந்தரியை சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த மகன் மகேஷ்குமார், மாமியார் நாகவள்ளி ஆகியோரையும்

சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார்.இதில், குணசுந்தரி, அவரது மகன் மகேஷ்குமார் ஆகியோர் இறந்தனர். நாகவள்ளி தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் தப்பினார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜை தேடி வந்தனர். ஆனால், அவர் போலீசில் சிக்காமல் மாயமானார். இந்நிலையில், நேற்று நாகவள்ளி கடைக்கு சென்றபோது, தூரத்தில் ராஜ் நடந்து செல்வது தெரிந்தது. உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜை கைது செய்ய முயன்றனர். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி தப்பிக்க முயன்றுள்ளார். அவரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவி, மகனை கொன்றுவிட்டு தப்பிய நான், பல இடங்களில் கூலி வேலை செய்து வந்தேன். ஒருநாள் என்னை சந்தித்த எனது தந்தை, போலீசில் சரணடையும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், குணசுந்தரியை என்னுடன் குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியார் நாகவள்ளியையும் கொன்றுவிட்டு போலீசில் சரணடைய முடிவு செய்தேன். இதற்காக சென்னை வந்து, ரகசியமாக திட்டம் தீட்டினேன். அதற்குள் போலீசில் சிக்கிக் கொண்டேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: