ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது; 6 பேருக்கு வலை

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்தனர். காரில் தப்பிய பெண் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.சென்னை ஓட்டேரி பகுதியில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் மங்களபுரம் பகுதியில் உள்ள டீக்கடையில் 3 பெரிய பார்சல்களுடன் நின்று கொண்டிருந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பினார். பிடிபட்டவரிடம் இருந்த பார்சல்களை சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரிந்தது.

விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் சிவநாயக்கன்பட்டி ஊத்துமலை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பதும், அவரிடம் மொத்தம் 44 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும், தினேஷின் கூட்டாளிகள் சேலம் பகுதியை சேர்ந்த யோகராஜ், மோகன், இந்துமதி, பிரகாஷ் உள்பட சிலர் சொகுசு காரில் மெரினா கடற்கரை பகுதியில் இந்த கஞ்சாவை வாங்குவதற்காக காத்திருப்பதும் தெரிந்தது. உடனே போலீசார் அங்கு சென்றனர். ஆனால், தினேஷ் பிடிபட்டது தெரிந்ததும் மேற்கண்ட நபர்கள் தப்பியது தெரிந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து சேலம் வரை உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட தினேஷிடம் விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் இருந்து சேலத்துக்கு கஞ்சாவை காரில் கொண்டு செல்ல திட்டமிட்டதும், காரில் ஒரு பெண் இருந்தால் போலீசார் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதால் தங்களுடன் ஒரு பெண்ணை அழைத்துவந்ததும் தெரியவந்தது. தினேஷை கைது செய்த போலீசார், காரில் தப்பிய பெண் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: