2 ஆண்டுக்கு பிறகு தாராபுரம் நகராட்சி பூங்கா திறப்பு

தாராபுரம், மே 24: தாராபுரம் பார்க் ரோட்டில் கடந்த 1935ம் ஆண்டு கட்டப்பட்ட நகராட்சி பூங்காவிற்கு தாராபுரம் நகரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் பொழுதை கழிக்க புகலிடமாக இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன் கொரோனா ஊரடங்கு காரணமாக பூங்கா பூட்டப்பட்டது. இதனால் பூங்கா முழுவதும் உள்ள அடர்ந்த மரங்களால் ஏற்பட்ட குப்பைகள் புதர்களாக மாறி பூங்காவில் இருந்த சிலைகள் வண்ணங்கள் மங்கி சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு விடுத்த கோரிக்கையை ஏற்று பூங்காவை தூய்மைப்படுத்தி புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவ, மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள் இணைந்து நகராட்சி பூங்காவில் மண்டிக்கிடந்த குப்பை கூழங்களை அகற்றி பூங்கா புதுப்பிக்கப்பட்டு நேற்று நகராட்சி பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் ராமர் தலைமையில் நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் தாராபுரம் நகர திமுக செயலாளர் தனசேகர், நகர்மன்ற துணைத்தலைவர் ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் முருகானந்தம்,  ஸ்ரீதர், கமலக்கண்ணன், உமா மகேஸ்வரி, புனிதா, முத்துலட்சுமி, முகமது யூசுப், தேவி அபிராமி, செலின் பிலோமினா, சக்திவேல், அன்பழகன் ,துரை சந்திரசேகர், சீனிவாசன், அன்பழகன், ராஜாத்தி, தனலட்சுமி, சாந்தி, முபாரக் அலி, நிர்மலா, மொரட்டாண்டி, சாஜிதா, சக்திவேல் உட்பட அனைத்து கவுன்சிலர்களும்  பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: