நீலகிரியில் தக்காளி விலை உயர்வு பொதுமக்கள் கடும் அவதி

ஊட்டி, மே 24:  நீலகிரி மாவட்டத்தில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு மலை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, கத்திரிக்காய், முருங்களை உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளில் விளையும் காய்கறிகள் அனைத்தும் மேட்டுப்பாளையம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தே கொண்டு வந்து இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், எப்போதும், சமவெளியில் விளையும் காய்கறிகளுக்கு நீலகிரியில் சற்று விலை அதிகமாக இருக்கும். காலை நிலை மாற்றத்தால் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த ஒரு மாதமாக விலை உயர்ந்தே காணப்படுகிறது.

கடந்த வாரம் வரை ஊட்டியில் தக்காளி கிலோ ஒன்று ரூ.60 முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. படிப்படியாக உயர்ந்து தற்போது கிலோ ஒன்று ரூ.90 முதல் 110 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலை உயரலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் விலையை கேட்டுவிட்டு தக்காளி வாங்குவதை தவிர்த்துவிட்டு திரும்பி விடுகின்றனர். மேலும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றனர்.

Related Stories: