மாயமான அக்காள், தங்கை மீட்பு

கோவை, மே 24: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 12-ம் வகுப்பும், மற்றொரு மகள் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் பள்ளிக்கு தொடர்ந்து செல்லாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்து, சிறுமிகள் இருவரையும் கோவை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள தனது தம்பியின் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். இந்நிலையில், சிறுமிகள் இருவரும் வெளியில் செல்வதாக கூறி சென்று உள்ளனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கோவை கிழக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமிகள் குறித்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் நிஷா, உதவி ஆய்வாளர் வித்யா ஆகியோர் சிறுமிகளின் பாடப்புத்தகத்தை சோதனையிட்டபோது, சில மொபைல் எண்கள் கிடைத்தது. அந்த எண்ணில் உள்ளவர்களை தொடர்பு கொண்ட போலீசார் சிறுமிகள் அழைத்தால் உடனடியாக தகவல் அளிக்க கூறினர். இந்நிலையில், திருச்சியில் உள்ள இன்ஸ்டாகிராம் தோழிக்கு சிறுமிகள் போனில் பேசியது தெரியவந்தது.

போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, மாணவிகள் பஸ்சில் செல்வது தெரியவந்தது. பின்னர், போலீசார் பஸ் கண்டக்டர் முனியப்பனிடம் சிறுமிகள் விவரத்தை தெரிவித்தனர். முனியப்பன் பேருந்து மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது மேலூர் அருகே சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மகளிர் போலீசார், மேலூர் போலீசாரை தொடர்பு கொண்டு சிறுமிகள் விவரத்தை தெரிவித்தனர். இந்நிலையில், சிறுமிகள் இருவரையும் கண்டக்டர் முனியப்பன், டிரைவர் ஆண்டிசாமி ஆகியோர் மேலூர் போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களை ராமநாதபுரம் மகளிர் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாயமான சிறுமிகளை மீட்க உதவிய பஸ் கண்டக்டர், டிரைவரை போலீசார் பாராட்டினர். சிறுமிகளுக்கும் பல்வேறு அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.

Related Stories: