விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி கால் முறிந்த நிலையில் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவி

விழுப்புரம், மே 24: விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றுடன் அறிவியல் பிரிவுக்கு தேர்வுகள் முடிவடைந்தன. இதனிடையே, விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஷர்மிளா (18). விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் நேற்று இவருக்கு கடைசி தேர்வாக உயிரியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு, தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

பள்ளி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியதில் பலத்த காயமடைந்தனர். உடனடியாக, தகவலறிந்து 108 அவசர ஊர்தி அங்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவி மற்றும் அவரது தாயை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் மாணவிக்கு கடைசி தேர்வு என்பதால் உடனடியாக சிகிச்சை அளித்து, மாவுக்கட்டு போட்டுவிட்டனர். கட்டுப்போட்டுக் கொண்ட, மாணவி அவசர ஊர்தி மூலமாக நேரடியாக தனது தேர்வு மையத்துக்கு தேர்வு எழுத வந்தார். பின்னர் தேர்வு மைய அதிகாரிகள் மாணவியை தேர்வு எழுத அனுமதித்ததுடன், சொல்வதை எழுதும் `ஸ்ரைப்’வும் நியமிக்கப்பட்டு தேர்வு எழுத உதவி செய்தனர். மாணவி தாமதமாக தேர்வை தொடங்கியதால் கூடுதலாக 45 நிமிடம் தேர்வு எழுத வழங்கப்பட்டது.

Related Stories: