கள்ளக்குறிச்சி மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் சில அரசு அலுவலர்கள் அரட்டை அடிப்பு செல்போன், வாட்ஸ்ஆப்பில் மூழ்கிய அவலம்

கள்ளக்குறிச்சி, மே 24: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் தர் அலுவலக பணி காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் தலைமையில் காலையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்துக்கு அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும், பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை நீண்ட வரிசையில் காத்திருந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷிடம் வழங்கி வந்தனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலர் தனது செல்போனில் வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் பார்த்தபடி அங்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் செல்போன் மோகத்தில் மூழ்கினர்.

அதில் ஒரு பெண் அலுவலர் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கி தூங்கி விழுந்தார். மேலும் சில அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மனு மீது எவ்வித அக்கறையும் காட்டாமல் செல்போனில் பேசுவதும், அக்கம்பக்கத்தில் உள்ள அரசு அலுவலரிடம் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இவர்கள்தான் நமது கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க போகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பி கொண்டு முனுமுனுத்தபடி சென்றனர்.

Related Stories: