குடிநீர் தொட்டி இயக்குவோருக்கு நிலுவை ஊதியதொகை வழங்ககோரி சிஐடியூ சங்கம் முற்றுகை போராட்டம்

திருவாரூர், மே 24: ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு உரிய ஊதிய நிலுவை தொகையினை வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு அரசு நிர்ணயித்தவாறு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும், தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு மாதாமாதம் தாமதமின்றி ஊதியம் நிலுவையில்லாமல் வழங்கிட வேண்டும், தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், கொரோனா முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை ரூ.15 ஆயிரத்தை உடன் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கான சம்பளத்தை நேரடியாக ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு பதவி உயர்வும், ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பொறுப்பாளர்கள் கலியமூர்த்தி, காமராஜ், லோகநாயகி, ஆறுமுகம், முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: