திருவாரூர் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

திருவாரூர், மே 24: திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்துறையின் ஜமாபந்தி நிகழ்ச்சியானது நாளை முதல் நடைபெறுவதால் பொது மக்கள் தங்களுக்கான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் துறையின் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சியானது நாளை (25ந் தேதி) துவங்கி அடுத்த மாதம் (ஜுன் 1ந் தேதி வரையில் (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டத்திற்குரிய தேதிகளில் தினசரி காலை 10 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது. அதன்படி நாளை முதல் 27ம் தேதி வரையில் திருவாரூர் வட்டத்தில் கலெக்டர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டத்தில் மன்னார்குடி ஆர்.டி.ஒ தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், குடவாசல் வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும் நடைபெறுகிறது. மேலும் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தலைமையிலும், நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் ஆர்.டி.ஓ தலைமையிலும் வரும் 31ம் தேதி வரையில் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது நடைபெறுகிறது. மேலும் மன்னார்குடி வட்டத்தில் ஜுன் 1ந் தேதி வரையில் டி.ஆர்.ஒ தலைமையில் நடைபெறுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை தங்களது வட்டத்திற்குரிய வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: