திருவாரூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்

திருவாரூர், மே 24: திருவாரூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிகழ்ச்சியானது கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி கிராமத்தில் நடைபெற்றது. பின்னர் 28 விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரகருவிகள், தென்னைக்கன்று, கை தெளிப்பான், காய்க்கறிவிதைகள் மற்றும் மண்புழுஉரங்கள், புல்அறுக்கும் கருவிகளும், 3 மகளிர் சுய உதவிக்குழுவிற்கும் கடனுதவியும் என மொத்தம் ரூ. 15 லட்சத்து 30 ஆயிரத்து 40 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாட்டில் இன்றையதினம் தமிழக முதல்வரால் கலைஞரின் வேளாண் வளர்ச்சித்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கங்களாக, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுதல், கால்நடைகளின் நலன்காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் புதிய பட்டா, பட்டா மாறுதல் வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகளவு பயிர்க்கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசனநீர் வழித்தடங்களை தூர்வாருதல் உள்ளிட்டவைகளாகும்.

அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 60 கிராமங்களில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை அனைத்து தரப்பு விவசாயிகளும் அறிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஒ சிதம்பரம், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரவீந்தீரன், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றிய துணை தலைவர் பாலசந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமாஹெப்சிபா நிர்மலா, ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: