சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 115 பிரிவுகளுக்கு இடஓதுக்கீடு

பெரம்பலூர், மே 26: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி 115 பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பெரம்பலூரில் சமூக நீதி கூட்டமைப்பின் கோரிக்கை விளக்க மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு ஊராளி கவுண்டர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராளிக் கவுண்டர் இளைஞர் பேரவை மற்றும் 115 பிரிவை உள்ளடக்கிய சமூக நீதிக் கூட்டமைப்பின் சார்பில் மாநாடு, பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு ஊராளிக் கவுண்டர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநாட்டில் மாநில பொருளாளர் தர்மராஜன் மற்றும் தமிழ்மாறன், நகரத் தலைவர் ரவிச்சந்திரன் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில், தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, அதில் தரவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சீர்மரபினர் ஒன்றிய அரசு பணிக்கு டிஎன்டி என்றும், மாநில அரசுக்கு டிஎன்சி என்றும் இரட்டை சான்றிதழ் முறை இருந்ததை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின், தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் டிஎன்டி என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மாநில பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். ஒன்றிய அரசு ரோகிணி கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். நீட்தேர்வு இல்லாமல் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் தமிழக அளவில் கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாநாட்டு தீர்மான நகலினை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் வெங்கடபிரியாவிடம் வழங்கினர்.

Related Stories: