வேலைவாய்ப்புகளை ஆதீனம், திருமடங்கள் உருவாக்க வேண்டும்

நாகை, மே 24: ஆதீனங்கள், திருமடங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில முதன்மைச் செயலாளர் சுந்தரவடிவேலன் தெரிவித்திருப்பதாவது:

ஆதீனங்களும், மடாதிபதிகளும் இந்து மக்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்கான எந்த பணிகளையும் செய்யவில்லை என்பது இந்து மக்களின் கருத்தாக இருக்கிறது. புதிதாக கல்வி நிறுவனங்களை உருவாக்க வில்லை. காலத்திற்கு ஏற்ற வகையில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த செய்யவேண்டிய பணிகளை செய்யவில்லை என்பது உண்மை. ஆதீனங்களின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச கல்வி வாய்ப்புகள் என்பது பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. எனவே ஆதீனகர்த்தர்களும், மடாதிபதிகளும் கல்வி நிறுவனங்களை புதிதாக உருவாக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்திலும், கட்டணமில்லாமலும் கல்வி வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் லஞ்சம் இன்றி, நன்கொடை இன்றி வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். திருமடங்களுக்கு, ஆதீனங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை தொழில்களை உருவாக்கி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: