கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கரூர், மே 24: கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (திங்கள்) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இந்த கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 279 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 61 மனுக்கள் பெறப்பட்டது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்துவருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் 8 நபருக்கு திறன்பேசி, 2 நபருக்கு தையல் இயந்திரம், 1 நபருக்கு எல்போ ஊன்றுகோல், 2 குழந்தைகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி உடனுக்குடன் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் வருவாய்த்துறை மூலம் 2 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஆணைகளையும் மற்றும் ஆதரவற்ற விதவை 3 நபருக்கு உதவித்தொகை ஆணைகளையும், முதலமைச்சர் நிவாரணம் நிதியிலிருந்து கந்தசாமி என்பவர் மகன் நீரில் முழுகி இறந்தமைக்கு ரூ.1 லட்சம் காசோலையும், 5 நபருக்கு ஆதரவற்ற விதவைச் சான்றுக்கான ஆணைகளையும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் நடைபெற்ற குரூப் - 2 பயிற்சி வகுபபில் 32 மாதிரித்தேர்வுகளில் பங்குபெற்று முதன்மை மதிபெண் பெற்ற 5 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1,000 பணப்பரிசு தொகை மற்றும் புத்தகத்தினை பரிசாகவும், 6 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.6.05 லட்சம் வங்கி கடனுதவிகளையும் என மொத்தம் 26 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: