×

திருச்செந்தூரில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க புறவழிச்சாலை திட்டம்: அமைச்சர்கள் எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருச்செந்தூர், மே 21: திருச்செந்தூரில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் நகரை கடந்து செல்வதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில், நகரின் எல்லையில் இருந்து கோயில் வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருச்செந்தூர் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்செந்தூர் கோயில் அருகிலுள்ள பைரவர் கோயில் கடற்கரை பகுதியில் புறவழிச்சாலையின் வழித்தடங்கள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரைபடங்கள் உதவியுடன் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர்கள் சந்திரசேகரன், பாலமுருகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து அமைச்சர்கள், கன்னியாகுமரி சாலையில் தோப்பூர் பகுதியிலும் புறவழிச்சாலை நிறைவடையும் இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக புறவழிச்சாலை அமைக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வரிடம் வலியுறுத்தினார். அதன்பேரில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் நகரின் எல்லையில் புறவழிச்சாலை துவங்கி வள்ளிக்குகை வரையில் சுமார் 1.75 கி.மீ. தொலைவிலும்,

நாழிக்கிணறு அருகே அய்யா கோயிலில் இருந்து தொடங்கி கன்னியாகுமரி செல்லும் சாலை வரையில் சுமார் 2.7 கி.மீ. தொலைவிலும் என 2 புதிய சாலைகள் சுமார் 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முழுமையான திட்ட விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தூத்துக்குடி எம்பி கனிமொழி கேட்டுக்கொண்டதின் பேரில் இந்த புறவழிச்சாலையில் கடல்நீர் புகும் என்பதால் சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் பாலம் மற்றும் 500 வாகனங்களுக்கான நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதி பெறுவதற்கான பணியை கலெக்டர் மேற்கொள்வார்.

தமிழகத்தில் மாமல்லபுரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையமே செய்து வருகிறது. இதனை விரைந்து முடிக்க நாங்கள் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகிறோம். திருச்செந்தூர் -வள்ளியூர் நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார். ஆய்வின்போது சண்முகையா எம்எல்ஏ, ஆர்டிஓ புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன், நெடுஞ்சாலைத்துறை நெல்லை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் உதவி கோட்ட பொறியாளர் விஜயசுரேஷ்குமார்,

உதவி பொறியாளர் சுபின், சாலை ஆய்வாளர்கள் ரமேஷ், ராணி, கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் செங்குழிரமேஷ், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார்ரூபன், கவுன்சிலர்கள் சுதாகர், செந்தில்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Thiruchendur ,Ministers ,EV ,Velu ,Anita Radhakrishnan ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...