விழுப்புரம் மாவட்டத்தில் 68 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் ஜூலை மாதத்திற்குள் திறக்கப்படும்

விழுப்புரம், மே 21: விழுப்புரம் மாவட்டத்தில் 68 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் ஜூலை மாதத்துக்குள் திறக்கப்படும். ரேஷன்கடைகளில் விரைவில் பாக்கெட் போட்டு தரமான அரிசி வழங்கப்படுமென உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை சார்பில் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபாணி, மஸ்தான் ஆகியோர் காணை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் மற்றும் காணைகுப்பத்தில் திறந்தவெளி நெல்சேகரிப்பு மையத்தையும், பெரும்பாக்கத்தில் நியாயவிலைக் கடையையும் ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், தமிழகம் முழுவதும் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேஷன் கடைகளை 2 ஆக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 68 பகுதிநேர புதிய ரேஷன் கடைகள் வரும் ஜூலை மாதத்துக்குள் திறக்கப்படும். தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன்கடைகள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. சொந்தமாக எம்பி, எம்எல்ஏ நிதியிலிருந்தும், தேவைப்பட்டால் தேசிய ஊரக வேலை திட்டத்திலிருந்தும் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழுநேரக்கடை என்றால் ரூ.10 லட்சம், பகுதிநேரகடை ரூ.7 லட்சத்தில் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதியரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியை விட, தற்போது தமிழகத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 56 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் சிறைக்கும், 3 பேர்மீது விஜிலென்ஸ் வழக்கும் போடப்பட்டுள்ளது, என்றார்.

எம்எல்ஏக்கள் புகழேந்தி, மணிக்கண்ணன், சிவக்குமார், ஆட்சியர் மோகன், மேலாண் இயக்குநர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி, காணை சேர்மன் கலைச்செல்வி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: