×

துப்புரவு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

கடலூர், மே 21: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள், தனியார் நிறுவனத்தின் மூலம், ஒப்பந்த அடிப்படையில், துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணியின்போது, இவர்கள் செல்போன் பயன்படுத்துவதாக கூறி, நேற்று முன்தினம் பணிக்கு வந்த பெண் ஊழியர்களை, அந்த தனியார் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர், சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெண் ஊழியர்களை சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை பணிக்கு வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், அரசு மருத்துவமனை முன்பு திரண்டு நின்றனர். அவர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் விரைந்து வந்து, அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் பணிக்கு சென்றனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்