‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’37 கிராம ஊராட்சிகளில் காணொலி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்

கோவை, மே 21: கோவையில் 37 கிராம ஊராட்சிகளில் ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 23ம் தேதி துவங்கி வைக்கிறார். அன்றைய தினமே கோவையில் கானொலி காட்சி மூலமாக முதல்வர் துவங்கி வைக்கிறார். கோவை மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டமானது வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்பு துறை, முன்னோடி வங்கி, வனத்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்ட உள்ளது.

அதன்படி, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசன நீர் வழித்தடங்களை தூர் வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்ட செயல்பாட்டினை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் சமீரனை தலைவராகவும், வேளாண்மை இணை இயக்குநரை உறுப்பினர் செயலாளராகவும், இதர துறையினரை உறுப்பினராகவும் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் துவக்க விழா அன்று வேளாண்மை துறை மூலம் நெட்டை தென்னங்கன்றுகள், பயிறு வகை விதைகள் விநியோகம், கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் விநியோகம் செய்யப்படும். தோட்டக்கலை மூலம் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான தளைகள் மற்றும் ஊக்கத்தொகை போன்றவைகள் வழங்கப்பட உள்ளன.

Related Stories: