×

ராமநாதபுரம் மாவட்டத்தில் 25,253 விவசாயிகளுக்கு ரூ.110.73 கோடி பயிர்க்கடன் வழங்கல்

ராமநாதபுரம், மே 21:  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 25 ஆயிரத்து 253 விவசாயிகளுக்கு ரூ.110.73 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்தார், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நடந்தது. கலெக்டர் சங்கர் லால் குமாவத் தெரிவிக்கையில், நீர்நிலை புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய், வேளாண் துறை அதிகாரிகள் எவ்வித தொய்வும் இன்றி உடனடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். உரம் தட்டுப்பாட்டை களைய போதிய உரம் இருப்பு வைக்க கூட்டுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வழங்கும் மனு மீது துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 114 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நுண்ணீர் பாசனத் திட்டம் 2021-22ன் கீழ் தோட்டக்கலை துறைக்கு ரூ.2.52 கோடி பெற்றுள்ளது. இலக்கு பெறப்பட்டு 557.73 எக்டருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 1.28 கோடி சாதனை அடையப் பெற்றுள்ளது. நடப்பாண்டில் 186 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.1.86 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், விவசாயிகளுக்கு தனிநபர்கள் 60 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.3.58 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது . குழு விவசாயிகளுக்கு 33 சமுதாய ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ. 5 கோடி மே 3 லட்சத்து 86 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நடப்பு 2021-22ம் ஆண்டில் கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 25 ஆயிரத்து 253 விவசாயிகளுக்கு ரூ.110.73 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வேளாண் துறை இணை இயக்குநர் டாம் பி சைலஸ், துணை இயக்குநர் ஷேக் அப்துல்லா, கூட்டுறவுத் சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனிக்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED தொடர் மழையின்றி எள் விவசாயம் பாதிப்பு