×

தூம்பக்குளம்புதூரில் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருமங்கலம் மே 21: கள்ளிக்குடி அருகே தூம்பக்குளம்புதூர் கிராமத்தில் மலையாள பகவதி பத்திரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமையான இக்கோயிலில் புதியதாக ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. ராஜகோபுரம், பரிவார தெய்வங்கள் மலையாள பகவதி பத்திரகாளியம்மன் மூலதான கோபுரம் ஆகியவற்றிற்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மே 15ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று முன்தினம் காலை 4ம் கால யாக பூஜைகள் துவங்கின. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோபுர கலசம், ராஜகோபுரம், மூலஸ்தான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பிள்ளையார்பட்டி வேதசிவாகம பாடசாலை முதல்வர் பிச்சை தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது வானில் பருந்து வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். தொடர்ந்து கும்பாபிஷேக அபிஷேகநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதினம், கோவை ஆதினம், திமுக சார்பில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், அதிமுக சார்பில் திருமங்கலம் எம்எல்ஏ உதயகுமார், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் மற்றும் மதுரை, திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், தூம்பக்குளம்- புதூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags : Temple Kumbabhishekam ,Thumbakkulambudur ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்