மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தியாகராய மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு 2 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள், ஊசிகள், ஸ்டெர்ய்ல் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், தரமணி பாரதியார் நகர் பரணி தெருவை சேர்ந்த சூர்யா (23), கீழ்கட்டளை ஈஸ்வரன் நகரை சேர்ந்த ராஜ்குமார் 28) என்பதும், இவர்கள் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை, ஊசி ஆகியவற்றை  விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.  மேலும், ஆன்லைன் ஆர்டர் மூலம் மும்பையில் இருந்து போதை மாத்திரை, ஊசிகளை மொத்தமாக வாங்கியதும், இவர்களுக்கு போன் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ போதை மாத்திரை, ஊசி வேண்டும் என்று தகவல் அனுப்பினால் நேரில் வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த மாத்திரையை, ஸ்டெர்ய்ல் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி உடலில் செலுத்தினால், ஒருவருக்கு பல மணி நேரம் போதை இருக்கும் என்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 1300 போதை மாத்திரைகள், 15 ஊசிகள், ஸ்டெர்ய்ல் தண்ணீர் பாட்டில்கள், 2 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

29 கிலோ கஞ்சா சிக்கியது

சென்னையில் கடந்த 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை போலீசார் நடத்திய தீவிர சோதனையில், கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 29 கிலோ 570 கிராம் கஞ்சா, 1,215 போதை மாத்திரைகள், 15 எல்எஸ்டி ஸ்டாம்புகள், 4 செல்போன்கள் மற்றும் ₹1190 ரொக்கம்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: