×

வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்

பெரம்பூர்: வியாசர்பாடி இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சசிகுமார் (22). புழல் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாசர்பாடி காமராஜர் சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 4 பேர், இவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், சசிகுமாரை கீழே தள்ளி தலையில் கத்தியால் வெட்டி விட்டு, அவரிடம் இருந்த விலை மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

 அருகில் இருந்த நபர்கள் உடனடியாக இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த எம்கேபி நகர் எஸ்ஐ மனோஜ், பைக்கில் மர்ம நபர்களை பின்தொடர்ந்து சென்றார். பொதுமக்கள் கூறிய அடையாளத்தின்படி பைக் பதிவு எண்ணை வைத்து செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளி சாலையில் அவர்களை மடக்கி பிடித்தார். அப்போது 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பினார்.

பிடிபட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் எண்ணூரை சேர்ந்த மதிவாணன் (22), வியாசர்பாடியை சேர்ந்த தீபக் (22), அதே பகுதியை சேர்ந்த திருமலை (22) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபரான கிருபாகரனை (22), வியாசர்பாடியில் வைத்து நேற்று கைது செய்தனர்.

Tags : SI ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு