தமிழக அரசின் ஓராண்டு முயற்சி காரணமாக தான் பேரறிவாளன் விடுதலை கிடைத்துள்ளது

திருவாரூர், மே 20: தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட திமுக சார்பில் நேற்று இரவு திருவாரூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் திருவாரூர் என்ற பெயரை பதித்தவர் மறைந்த தலைவர் கலைஞர். அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருந்த தலைவர் கலைஞரின் ஊரில் அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீண்ட காலமாக அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்னர் அந்த வழக்கினை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அந்த வகையில் திருவாரூர் என்பது மறக்க முடியாத ஒன்றாகும்.

தலைவர் கலைஞரின் வழியில் திராவிட மாடல் அரசை வழிநடத்தி வரும் தளபதியார் இந்த திருவாரூரில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும். மேலும் கலைஞரின் வரலாறு கூறும் வகையில் அறிவாலயம் ஒன்றையும் இந்த காட்டூரில் கட்டி வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலைக்கு கலைஞர் நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தார். அவரது வழியில் தளபதியும் 7 பேர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். அதன்படி தமிழக அரசின் ஓராண்டு ஆட்சியின் முயற்சி காரணமாகதான் பேரறிவாளன் விடுதலை கிடைத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: